Header Ads

இலங்கை மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்!

 


இலங்கை பொது மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் எளிமைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் இணைத் தலைவர்களாக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க மற்றும் கிரிஷான் பாலேந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் செயாலாளராக ஓய்வு பெற்ற அமைச்சு செயலாளர் ஜி.எஸ் விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழு முதலீடுகள் மற்றும் நிர்மாணத்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தொடர்புடைய தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை வழிகாட்டுதல்கள், அனுமதிப் பத்திரங்கள் மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகள், அரச நிதி மற்றும் வரி வருவாய்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் அவற்றை ஏற்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி முழுமையாக மீளாய்வு செய்யும்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றறிக்கை வழிகாட்டுதல்களை வெளியிடுவதும், அவ்வப்போது பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதும் காரணமாக அடிப்படை நோக்கத்திலிருந்து விலகல்களுக்கு வழிவகுத்துள்ளதா? என்பதையும் இந்த குழு ஆய்வு செய்யும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.