சம்மாந்துறை மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை! வதந்தியால் ஏற்பட்ட பதற்றம்
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவம் சம்மாந்துறையில் பதிவாகியுள்ளது.
அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள் வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாடசாலைக்கு படையெடுத்த பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விடுமாறும் பிசிஆர் எடுக்கவேண்டிய தேவையில்லை எனவும் அதிபர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவித்த அதிபர்கள், இது ஒரு வதந்தி என தெரிவித்தனர்.
இருந்தபோதும் பெற்றோர் அதிபர்களின் பேச்சை பொருட்படுத்தாது தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் செற்றுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments