Header Ads

வடக்கு- கிழக்கிலுள்ள மக்களிடம் சாணக்கியன் விடுக்கும் கோரிக்கை!

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரியுள்ளார்.

நேற்று மாலை, விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

‘எதிர்வரும் 11ஆம் திகதி (திங்கட்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம். அன்றைய தினம் கடைகளை அடைத்து தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்ற அநீதிகளுக்கு நாம் அனைவரும் ஒருமித்த குரலாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அதேப்போல பல்வேறு விடயங்களில் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டு வருகின்றது. நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை இந்த இடத்தில் நிச்சயமாக தெரிவிக்க வேண்டும்.

அந்தவகையில் கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தாலும், வடக்கு- கிழக்கில் வாழும் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்த விடயத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

கடந்த தேர்தலில், கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள், அரசியல் பின்னணிகள் வேறாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தில் எங்களுடைய அன்பார்ந்த,பணிவான ஒரு வேண்டுகோள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலாக இந்த ஹர்த்தாலை நடத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.