Header Ads

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு – நீதிமன்றத்தின் உத்தரவு



 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 05 பிரதிவாதிகளும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எஸ் சூசைதாசன் இன்று (13) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் (11) மீள பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசங்க ஆகியோரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் சந்தேக நபர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments

Powered by Blogger.