Header Ads

நினைவு தூபி இடிப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சரின் செய்தி!

 


பயங்கரவாதிகளை நினைவு கூருவற்கு இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை. அதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது “யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டு அமைதியின்மை ஏற்பட்டு மீளவும் அதனை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. அங்குள்ள நினைவுத் தூபி விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கானதல்ல, மாறாக யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களையே என்கிற கருத்து சொல்லப்படுகின்றது. அதனை அகற்ற வேண்டும் என்பதற்கான நியாயங்கள் என்ன?” என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அவர்,

“அப்படியென்றால் வரவேற்கத்தக்க விடயம், ஆனால் அது அப்படியானதல்ல. நாங்கள் பயங்கரவாதிகளை நினைவு கூருவற்கு இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை. அதனை அங்குள்ள மாணவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு நினைவுத் தூபி அமைப்பதனை வெட்கமாக கருத வேண்டும். தங்களுடைய மக்களையே கொலை செய்தவர்களுக்கு நினைவுத் தூபி கட்டுவதனையிட்டு வெட்கப்படுதல் வேண்டும்.

2001 சமாதான காலப் பகுதியில் வடக்கின் கடற்டை கட்டளைத் தளபதியாக இருந்தேன். எனக்குத் தெரியும் அவர்கள் சிறுவர்களை அவர்களது படைக்கு எப்படி அழைத்துச் சென்றனர் என்று.

அடுத்தநாள் காலையில் முகமாலையில் தாய்மார்கள் அழுது கொண்டு வன்னிக்கு செல்லும் வான்களை எட்டி எட்டி பார்த்துக் கொண்டு நிற்பார்கள். எதற்காகவென்றால்,

அதற்கு முந்திய இரவு வீடுகளுக்குள் நுழைந்து பலாத்காரமாக அழைத்துச் சென்ற பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று பார்க்க ஆகும்.

பாடசாலைகளில் இருந்து ஆர்ப்பாட்டங்களுக்கு மாணவர்களை எடுக்கின்ற போது அதற்கு எதிராகவுள்ள அதிபர்களை வீடுகளுக்குள்ளேயே சுட்டு சடலமாக்கினர்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்புகின்ற பணத்தை ஐம்பது வீதம் கப்பமாக பெற்றுக் கொண்டனர். மீனவர்களின் வருமானத்தில் ஐம்பது வீதத்தை கப்பமாக பெற்றனர். சில கடை முதலாளிகள் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

அவ்வாறு செய்த பயங்கரவாதிகளுக்காகவா அவர்கள் நினைவுத் தூபி அமைக்கின்றனர்? அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஐயாயிரம் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த போது, அம்மக்களை இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் வெளியே எடுத்தோம்.

அவர்கள் இராணுவத்தினரை நோக்கி சென்ற போது காவலரண்களுக்குள் இருந்து சுட்டுத் தள்ளினர். சின்னஞ் சிறுசுகளின் கால்களை வெட்டினர்.

இவ்வாறு செய்த புலிப் பயங்கரவாதிகளுக்காகவா நினைவுத் தூபி நிறுவ முற்படுகின்றனர்? அதற்காக அவர்கள் வெட்கப்படடுதல் வேண்டும்.

அவர்கள் வேறு நினைவுத் தூபிகளை நிறுவ முடியும். அவர்கள் வெட்கப்பட்டாலோ, இல்லையோ பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

No comments

Powered by Blogger.